முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, கலைஞர் நூற்றாண்டு பூங்காவில், பல்வேறு விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, பொங்கல் திருநாளையொட்டி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்திவரும் தமிழக அரசிற்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, கடந்த 5 ஆண்டுகளில் - வேளாண்மைத் துறைக்காக ஐந்து தனி நிதி நிலை அறிக்கை அளித்து 1.94 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 54,701 ஏக்கர் தரிசு நிலங்கள் சாகுபடிக்கு உகந்ததாக மாற்றம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், இயற்கை வேளாண்மை, பசுந்தாள் உரமிடுதல், ஒருங்கிணைந்த பண்ணையம் போன்ற செயல்பாடுகளுக்கு ரூ.320 கோடி நிதி ஒதுக்கீடு, குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்திற்கு ரூ. 481 கோடி ஒதுக்கீடு, விவசாய நிலங்களுக்கு புதிதாக 1.82 லட்சம் மின் இணைப்புகள், பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் 37 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ. 6,049 கோடி இழப்பீடு என்பது போன்ற பல்வேறு திட்டங்களை வேளாண் பெருமக்களின் நல்வாழ்விற்காக சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு விவசாய அமைப்புகளைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் நிருவாகிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினையும், பொங்கல் நல்வாழ்த்துகளையும் இச்சந்திப்பின்போது தெரிவித்துக் கொண்டனர். அப்போது, முதல்வரும், விவசாய சங்க நிருவாகிகளுக்கு தன்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

இச்சந்திப்பில், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் தலைவர் வெ. தனபாலன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் மு.சேரன், தென்னிந்திய நதிகள் இயக்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு, விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் எம்.வெங்கடேசன், காணி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் பிரகாஷ், முப்பெரும் உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்க தலைவர் கே.எம்.வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.