தமிழக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் வகையில் தி.மு.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. அனைத்து அணிகளையும் களத்தில் இறக்கிவிட்டு, மக்களுடனான நெருக்கத்தை தி.மு.க. அதிகப்படுத்தி வருகிறது. 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்வதே இலக்கு என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளுக்கு களப்பணிகளில் தி.மு.க. நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் ஒரு பக்கம் பிரமாண்ட மாநாடுகளை நடத்துவது, இன்னொரு பக்கம் வீடு, வீடாகச் சென்று இதுவரை செய்திருக்கிற, செய்யப்போகிற திட்டங்களை விளக்குவது என்று தி.மு.க. நிர்வாகிகள் பம்பரமாகச் சுற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலையில் வடக்கு மண்டல தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பை நடத்தியது. அடுத்ததாக விருதுநகரில் தெற்கு மண்டலத்துக்கான சந்திப்பை நடத்த இருக்கிறது.
அதே நேரத்தில் தமிழகத்தில் 3.2 கோடி பெண் வாக்காளர்கள் இருக்கின்றனர். அவர்களை நேரடியாக அணுகி கட்சியின் நலத்திட்டங்களை விளக்கவும், தேர்தல் வெற்றிக்கான அடித்தளத்தை உறுதிப்படுத்தவும் மண்டல வாரியாக மகளிர் அணி மாநாடுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற தலைப்பில் நடந்த மாநாட்டில் மேற்கு மண்டல தி.மு.க. நிர்வாக மாவட்டங்களில் இருந்து சுமார் 1.5 லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தி.மு.க. டெல்டா மண்டலத்தில் தனது இரண்டாவது வெல்லும் தமிழ்ப் பெண்கள் மகளிர் அணி மாநாட்டை நடத்துகிறது. நாளை 26-ம் தேதி தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இந்த மாநாடு நடக்கிறது. மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் மாநாடு நடக்கிறது. டெல்டா மண்டலத்தில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் இருக்கின்றன.
இந்த டெல்டா மண்டல மகளிரணி மாநாடு டெல்டாவை முழுமையாக தி.மு.க.வே கைப்பற்ற உதவும் என்பது தி.மு.க. நிர்வாகிகளின் நம்பிக்கையாக உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வார்டு, தெரு அளவில் வாக்காளர்களை அணுகும் பணிகளும் தி.மு.க. தரப்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.