யோனக்​ஸ்​-சன்​ரைஸ் இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடர் டெல்​லி​யில் உள்ள இந்​திரா காந்தி விளை​யாட்டு வளாகத்​தில் நேற்று தொடங்கியது.

வரும் 18-ம் தேதி நடைபெறும் இந்​த போட்டி பி.டபிள்.​யூ.எப் உலக டூர் சூப்​பர் தொடரின் 750 புள்ளி​களை கொண்டதாகும். வரும் ஆகஸ்ட் மாதம் இதே மைதானத்​தில் பி.டபிள்​.யூ.எப் உலக சாம்​பியன்​ஷிப் பாட்மிண்​டன் தொடர் நடை​பெறுகிறது. இதனால் தற்போது நடை​பெறும் இந்​தியா ஓபன் தொடர் முக்கியத்துவம் பெற்​றுள்​ளது. 6 நாட்​கள் நடை​பெறும் இந்​தத் தொடரில் மகளிர் உலகத் தரவரிசை​யில் முதலிடத்​தில் உள்ள தென் கொரி​யா​வின் ஆன் சே யங் மற்​றும் உலக டூர் பைனல்ஸ் சாம்​பிய​னான பிரான்​ஸின் கிறிஸ்டோ போபோவ் உட்பட 20 நாடு​களைச் சேர்ந்த 256 வீரர், வீராங்​க​னை​கள் பங்​கேற்கின்றனர். அதி​கபட்​ச​மாக சீன தைபே​வில் இருந்து 36 வீரர், வீராங்கனை​கள் இந்​தத் தொடரில் கலந்து கொள்கின்றனர்.

இந்​தி​யா​வில் இருந்து பி.​வி. சிந்​து, மாளவிகா பன்​சோத், லக் ஷயா சென், கிடாம்பி காந்த், ஹெச்.எஸ்​.பிர​னாய், சாட்விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்​டி, ஷிராக் ஷெட்​டி, ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த், கவிப்​பிரியா செல்​வம், சிம்​ரன் சிங், துருவ் கபிலா, தனிஷா கிரஸ்டோ உள்​ளிட்ட 28 வீரர், வீராங்​க​னை​கள் களமிறங்குகின்றனர். இந்​தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை சுமார் ரூ.8.56 கோடி​யாகும். ஆண்​டின் தொடக்​கத்​தில் நடை​பெறும் இந்தத் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் இதே மைதானத்​தில் நடை​பெற உள்ள உலக சாம்​பியன்​ஷிப்​பிற்கு தகுதி பெறுவதற்​கான புள்​ளி​களை குவிப்​ப​தற்​கான வாய்ப்​பு​களை வீரர், வீராங்​க​னை​களுக்கு வழங்​கு​கிறது. மேலும் இங்​குள்ள சூழ்​நிலைகளை வீரர், வீராங்​க​னை​கள் தகவமைத்​துக்​ கொள்​ள இந்​தத் தொடர் உதவியாக இருக்கக் ​கூடும்.