செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டிற்கு தலைமை ஏற்றதற்காக இந்தியாவை பாராட்டுகிறேன் என்று ஐ.நா. பொதுசெயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் வரும் 19,20-ம் தேதிகளில் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு மற்றும் கண்காட்சி நடக்கவுள்ளது. இந்தியா ஏ.ஐ. தொழில்நுட்ப வளர்ச்சியில் செய்து வரும் திட்டங்கள் அதன் எதிர்கால தாக்கங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஐ.நா. பொது செயலாளர் இந்தியாவுக்கு வருகிறார். இந்த உச்சிமாநாட்டிற்கு தலைமை ஏற்றதற்காக இந்தியாவை அன்டோனியோ குட்டரெஸ் பாராட்டினார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஏ.ஐ. மாநாட்டில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய காலகட்டத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம் முக்கியமானதாக உருவெடுத்துள்ளது. இது குறித்து விவாதிப்பது மிகவும் முக்கியம். இந்த உச்சிமாநாட்டிற்கு தலைமை பொறுப்பை ஏற்றதற்காக இந்தியாவை பாராட்டுகிறேன். ஒரு வளரும் நாடான இந்தியாவுக்கு ஏற்கனவே குறிப்பிடத்தக்க திறன்கள் இருந்த போதும் மனிதகுலம் அடையப்போகும் நன்மையே இந்த உச்சிமாநாட்டின் மைய நோக்கமாக இருக்கும். மாநாடு அனைவருக்கும் வளர்ச்சியை ஏற்படுத்தும். இதன் மூலம் செயற்கை நுண்ணறிவின் உண்மையான தாக்கங்களை மதிப்பிடுவதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.