ஆந்​தி​ரா, தெலுங்​கா​னா, ஒடிசா உள்​ளிட்ட மாநிலங்​களைப் பின்​பற்றி தமிழகத்​தி​லும் ஆசிரியர் தகு​தித் தேர்​வுக்​கான (டெட்) தேர்ச்சி மதிப்​பெண் 5 சதவீதம் குறைக்​கப்​படு​கிறது. இதற்​கான அரசாணை விரை​வில் வெளி​யாக உள்​ளது.

மத்​திய அரசின் இலவச கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணி​யாற்​றும் இடைநிலை ஆசிரியர்​கள் டெட் தேர்​வில் கட்​டா​யம் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்​தில் டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரி​யம் நடத்துகிறது. இதற்கிடையே, அண்மை​யில் அமைச்​சர் அன்​பில் மகேஸிடம், இதர மாநிலங்​களைப்போல் தமிழகத்​திலும் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

அதை தொடர்ந்து மற்ற மாநிலங்​களைப் போல் தமிழகத்​தி​லும் மதிப்​பெண்ணை குறைக்க அரசு முன்​வந்​துள்​ளது. அதன்​படி, ஆந்​தி​ரா​வில் இருப்​ப​தைப்​போன்று பி.சி., எம்.​பி.சி. வகுப்​பினருக்கு 50 சதவீத​மாக​வும் (150-க்கு 75 மதிப்​பெண்) எஸ்.​சி., எஸ்.டி. வகுப்​பினருக்கு 40 சதவீத​மாக​வும் (150-க்கு 60) என குறைக்​கப்​படு​கிறது. இதற்​கான அரசாணை விரை​வில் வெளி​யிடப்பட உள்​ள​தாக பள்​ளிக்​கல்​வித் துறை வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

அரசு பள்​ளி​களில் இடைநிலை ஆசிரியர், பட்​ட​தாரி ஆசிரியர் நியமனத்தை பொருத்​தவரை​யில் டெட் தேர்ச்சி பெற்​றாலும் அவர்​கள் பணிநியமனத்​துக்கு மற்​றொரு போட்​டித் தேர்வை எழுத வேண்​டும் என்பது குறிப்பிடத்தக்கது.