சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 26-ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் அரையாண்டு விடுமுறையில் போராட்டத்தை தொடங்கிய அவர்கள், பள்ளிகள் திறந்த பின்பும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு அறிவித்தது. இதனால் கோபமடைந்த ஆசிரியர்கள், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என அறிவித்தனர்.
அதன்படி, சென்னை எழும்பூர் காந்தி இர்வின் மேம்பாலத்தில் நேற்று முன்தினம் 14-வது நாளாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள், எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து பேரணியாக சென்றனர். பின்னர் அவர்கள், காந்தி இர்வின் மேம்பால சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், மேம்பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு ஆசிரியர்கள் சாலை மறியலை கைவிட்டு மேம்பாலத்தின் ஒரு பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 3 ஆயிரம் ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைதான ஆசிரியர்கள் மண்டபங்களில் தங்கவைக்கப்பட்ட நிலையில், மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் 15-வது நாளாக நேற்றும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.