16-வது இளையோர் (19 வயதுக்கு உட்பட்டோர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. வின்ட்ஹோக்கில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, ஜப்பான் அணியை (ஏ பிரிவு) எதிர்கொண்டது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த ஜப்பான் அணி 8 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 29.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது. வில் மலாஜ்சுக் 102 ரன்னும் (55 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்) நிதேஷ் சாமுவேல் 60 ரன்னும் திரட்டி வெற்றியை எளிதாக்கினர். முன்னதாக மலாஜ்சுக் 51 பந்துகளில் சதத்தை கடந்து, இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார்.