30 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்த தாக்கரே குடும்பத்திடம் இருந்து பா.ஜ.க. அந்த மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் சிவசேனாவை பா.ஜ.க.வால் அழிக்க முடியாது என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பால் தாக்கரே நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த நிகழ்ச்சியில் அவர் இது தொடர்பாக பேசியதாவது:-
சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி மட்டுமல்ல. அது ஒரு சித்தாந்தம் நிறைந்தது. அதை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று பா.ஜ.க. நினைத்தால் அது தவறு. எங்களை பா.ஜ.க.வால் அழிக்க முடியாது. சிவசேனா இல்லை என்றால் பா.ஜ.க. ஒருபோதும் மும்பை மாநகராட்சியையோ அல்லது மாநிலத்தையோ கைப்பற்றி இருக்க முடியாது. உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக பணபலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் குறைபாடு உள்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் சந்தித்தன. மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நாங்கள் விரும்பியபடி இல்லாவிட்டாலும் வலுவான எதிர்க்கட்சியாக உள்ளோம்.
சிவசேனா அதிகாரம் பெறுவதற்காக தொடங்கப்படவில்லை. மராட்டிய மக்களின் உரிமைக்காக போராடுவதற்காகவே தொடங்கப்பட்டது. மராட்டிய மாநிலத்தில் மராத்தி அல்லாத கலாச்சாரத்தை திணிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. 1-ம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முடிவு (பின்னர் திரும்ப பெறப்பட்டது) இந்த சதியின் ஒரு பகுதி. சிவசேனா தொண்டர்களால் பொதுவாக பயன்படுத்தப்படும் ஜெய் மராட்டியம் என்ற முழக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அனைவரும் அதை ஒரு வாழ்த்தாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.