புதுடில்லி: பெரும் சவால்களைக் கண்டு அஞ்சக்கூடாது; தீர்வுகளைத் தேடத் துணிவுடன் இருங்கள் என இளம் தலைமுறையினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

டில்லி ஐஐடியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், மாணவர்களுக்கு பிரதமர் மோடி பட்டங்களை வழங்கினார். அவர் பேசியதாவது: நாட்டின் திறமைமிக்க இளைஞர்களாகிய உங்கள் வாழ்வில் ஒரு புதிய பயணத்தின் துவக்கம்; நாட்டுக்காக சிறந்த சாதனைகளைப் புரிய வேண்டும் என்று கனவுடன் இருக்கும் உங்களை பார்ப்பதில் பெருமை. ஒவ்வொருவரின் பாதையும் வேறுபட்டது. ஒவ்வொருவரின் கனவும் தனித்துவமானது. இன்று உங்கள் குடும்பத்தினர் பெருமிதம் கொள்வதைப் போலவே, நானும் உங்கள் அனைவரையும் பற்றி பெருமை கொள்கிறேன். ஏனெனில், நீங்கள் வெறும் பட்டத்தை மட்டும் பெறவில்லை; நாட்டிற்காகச் சிறந்த காரியங்களைச் செய்ய வேண்டும் என்ற கனவுகளுடன் நீங்கள் அடியெடுத்து வைக்கிறீர்கள்.

நீங்கள் அடையும் ஒவ்வொரு வெற்றியிலும் அவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து, அவர்களுக்கு நன்றியுணர்வுடன் இருப்பீர்கள். உலகம் மாறும்; தொழில்நுட்பம், தொழில்துறைகள் மற்றும் தொழில்முறைகள் என அனைத்தும் மாறும். ஆனால் இவை அனைத்திற்கும் மத்தியிலும், தொடர்ந்து கற்றுக்கொள்பவர்களே வெற்றி பெறுவார்கள். உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் நீங்கள் இந்த நிறுவனத்திலிருந்து பட்டம் பெறுகிறீர்கள். அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் உலகம் எப்படி இருக்கும் என்பதை இன்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. வாழ்க்கையில் உங்கள் ஆர்வத்தைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து கற்றுக்கொண்டே இருங்கள். இந்தியாவின் ஸ்டார்ட்-அப் (startup) புரட்சியை வடிவமைத்து வலுப்படுத்தியது உங்கள் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள்தான். இந்த நிறுவனத்திலிருந்தே பல நிறுவனர்கள் உருவாகியுள்ளனர். ஒரே ஒரு நிறுவனத்தால் இவ்வளவு சாதிக்க முடியும் என்றால், நாடு முழுவதும் உருவாக்கப்பட்டு வரும் மகத்தான வலிமையைச் சற்று கற்பனை செய்து பாருங்கள்.

பெரும் சவால்களைக் கண்டு அஞ்ச கூடாது; தீர்வுகளைத் தேடத் துணிவுடன் இருங்கள். போதுமான சிந்தனையோ புரிதலோ இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படும் கருத்துக்களையும் நடைமுறைகளையும் மாணவர்கள் கேள்விக்குட்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.