டெல்லியில் குடியரசு தின விழாவை நேரில் பார்வையிட கோவையைச் சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு அழைப்பு விடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடிதம் அனுப்பியுள்ளார்.
கோவை கவுண்டம்பாளை யத்தை சேர்ந்தவர் சங்கீதா (40). ஆட்டோ ஓட்டுநர். இவரது கணவர் பாலாஜி. இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து இவருக்கு கடிதம் வந்தது. அஞ்சல் அலுவலர் வழங்கிய அந்த கடிதத்தை பிரித்து படித்ததும் அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். அந்த கடிதத்தில் வருகிற 26-ம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவை நேரில் பார்வையிடவும், ஜனாதிபதியுடன் தேநீர் அருந்தவும் அவருக்கு ஜனாதிபதியிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. இதனால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்த சங்கீதா, தனது கணவருடன் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டரை சந்தித்து அழைப்பு கடிதத்தை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து சங்கீதா கூறும் போது, ‘நான் கடந்த 7 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். எனது கணவர் கட்டிட தொழிலாளியாக உள்ளார். நாங்கள் இருவரும் சிறுக, சிறுக சேமித்த பணத்தில் எனது பூர்வீக நிலத்தில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் வீடு கட்டினோம். மேலும், எங்களது இரு குழந்தைகளையும் படிக்க வைத்தோம். தற்போது குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்கவும், குடியரசு தின பேரணியை நேரில் பார்வையிடவும் அழைப்பு கிடைத்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.