கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டி20 உலகக் கோப்பை நேற்று இந்தியா மற்றும் இலங்கையில் ஆரவாரத்துடன் தொடங்கியது. இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தமாக 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன் ஆகிய அணிகளும், குரூப் சி பிரிவில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்து, இத்தாலி, நேபாளம் ஆகிய அணிகளும், குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
லீக் சுற்றின் முதல் போட்டி இலங்கையில் உள்ள கொழும்பு எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் திடலில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. பாகிஸ்தான் அணியில் சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், சல்மான் அகா (கேப்டன்), பாபர் அசாம், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), ஷதாப் கான், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அப்ரிடி, சல்மான் மிர்சா, அப்ரார் அகமது ஆகியோரும், நெதர்லாந்து அணியில் மேக்ஸ் ஓ'டவுட், மைக்கேல் லெவிட், பாஸ் டி லீட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன் - விக்கெட் கீப்பர்), காலின் ஆக்கர்மேன், சாக் லயன் கேசெட், வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், கைல் க்ளீன், பால் வான் மீகெரென் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
போட்டியைப் பொருத்தவரை இந்திய அணி சாம்பியன் கோப்பையை தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. ஆசியக் கோப்பை நடப்பு சாம்பியனாகவும் இருக்கும் இந்தியா, அண்மையில் விளையாடிய இரு தரப்பு தொடா்களில் இந்த பாா்மட்டில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.