சென்னை: கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் அல்லது அந்தந்த மாநில அரசுகளால் தீர்மானிக்கப்படும் மாணவர் சேர்க்கை அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே நடைபெற வேண்டுமென வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.
அக்கடிதத்தில், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான மிக முக்கியமான பொருண்மை குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் சட்டம், 1984-ன் விதிமுறைகளின்படி, அனைத்து கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு முறை மூலம் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளதோடு, அதற்கு மாற்று ஏற்பாடாக, மேற்படி 2026-27 கல்வியாண்டு முதல் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த முடியாத பட்சத்தில், நீட் தேர்வின் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில், மாநிலங்களுக்கு அறிவுறுத்தியிருப்பது தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த முன்மொழிவு, தமிழ்நாடு மாநிலத்திற்குப் பல்வேறு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு, மேல்நிலைப் பள்ளித் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கை முறையை பல தசாப்தங்களாக பின்பற்றி வருகிறது. கடந்த 2007-2008 ஆம் கல்வியாண்டு முதல், தமிழ்நாடு அரசு, தொழிற்கல்விப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்துள்ளது என்றும், குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட பல திறமையான மாணவர்களுக்கு நுழைவு நிலையில் பெரும் தடைகளை நீட் (NEET) உள்ளிட்ட ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுகள் ஏற்படுத்துகின்றன.
நீட் தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருவதை குறிப்பிட்டுள்ள அவர், இத்துறையில் சேரும் மாணவர்களின் பின்புலம் மற்றும் கால்நடைத் துறையின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகள் ஆகியவை நாடு முழுவதும், மாநிலத்திற்கு மாநிலம் கணிசமாக மாறுபடுகின்றன என்றும், இந்தச் சூழலில், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அளவுகோல்களைத் தீர்மானிக்கும் உரிமையை அந்தந்த மாநில அரசுகளிடமே விட்டுவிடுவதுதான் சரியானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். எனவே, இது குறித்து மாண்புமிகு பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்துமாறும், மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான சேர்க்கையைத் தொடரவோ அல்லது மாணவர் சேர்க்கை அளவுகோல்களை அந்தந்த மாநில அரசுகளே தீர்மானிக்கவோ அனுமதிக்க வேண்டுமென்றும் அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.