தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். இதனைத் தொடர்ந்து கவர்னரின் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இந்தச் சூழலில், அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,
கடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது. நாங்கள் பலமுறை போதைப் பொருள்களை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த அரசு செவிசாய்க்கவில்லை. இப்படிப்பட்ட மோசமான தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும், முதல்வர் ஸ்டாலின் ராஜினமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.
கவர்னர் மீது ஒரு தவறான எண்ணத்தை உருவாக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் முதல்வர் ஒரு அறிக்கையை தயார் செய்து சட்டப்பேரவையில் தீர்மானமாக கொண்டு வந்துள்ளனர். கவர்னர் உரையில் வேறு யாரும் கருத்து சொல்ல முடியாது. மரபுப்படி கவர்னர் உரையில், அவரது உரை மட்டுமே இடம்பெற வேண்டும். ஆனால், முதல்வர் தனது கருத்துக்களை இதில் பதிவு செய்கிறார். இது எந்த வகையில் நியாயம். தேசிய கீதம் பாடப்படவில்லை என்ற கவர்னரின் குற்றச்சாட்டு குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. மக்களின் பிரச்சினைகளை மட்டுமே இங்கு பேச வந்துள்ளோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.