புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2025 செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக விஜய் பதவியேற்றதை தொடர்ந்து, கரூரில் கடந்த ஜூலை 10-ம் தேதி நடைபெற்ற நிகழ்வில், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார். அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நாதகவின் தீரன் திருமுருகன், மதுரை வழக்கறிஞர் சீனி அகமது உள்ளிட்ட 3 பேர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மாநில அரசு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பரிதிவாலா சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், மாநில அரசு மற்றும் பிறருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.