மேட்டூர்: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று விநாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்தது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 13-ம் தேதி காலை 6 மணி அளவீட்டின்போது விநாடிக்கு 9,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, அன்று காலை 11 மணியளவில் 6,500 கனஅடியாகவும், 14-ம் தேதி காலை 6,000 கனஅடியாகவும் குறைந்தது.

நேற்று முன்தினம் காலை 6 மணி நிலவரத்திலும் 6,000 கனஅடியாக நீடித்த நீர்வரத்து, அன்று காலை 11 மணியளவில் 4,500 கனஅடியாகக் குறைந்தது. இந்நிலையில், கர்நாடகாவிலுள்ள அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்று பிற்பகலில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனிடையே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,555 கனஅடியில் இருந்து 12,174 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் மாலை 4 மணி, நிலவரப்படி 82.13 அடியாக உயர்ந்துள்ளது. மேலும், மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.