மத்திய அரசு மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பல விதிகளை மாற்றி விபி ஜி ராம் ஜி சட்டத்தை கொண்டு வந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் டெல்லியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டதொழிலாளர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்பது வெறும் ஒரு திட்டமல்ல, அது இந்தியாவின் ஏழைக் குடும்பங்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை. மோடி அரசு இந்தத் திட்டத்தை ரத்து செய்வதன் மூலம் கிராமப்புற இந்தியாவின் அடித்தளத்தையே தகர்க்க முயல்கிறது. கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறித்து, அவர்களைப் பசிக்குத் தள்ளுவது இந்த அரசின் கொடூரமான முகம். காங்கிரஸ் கட்சி இதை ஒருபோதும் அனுமதிக்காது. ஏழைகளின் உரிமைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடுவோம். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.