உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக விலகியது. இதனால் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமாக உலக சுகாதார அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைமை அலுவலகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ளது. உலகளவில் சுகாதாரம் தொடர்பான பணிகளை இந்த அமைப்பு மேற்கொள்கிறது. உலக சுகாதார அமைப்பில் பெரும்பாலான நாடுகள் உறுப்பினராக உள்ளன.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக விலகியது. சுகாதாரம் தொடர்பான தகவல்கள், அவற்றை பகிர்ந்து கொள்ளுதல், அதன் மூலம் நோய் பரவல் தொடர்பான எச்சரிக்கை வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்புடன் நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் இந்த அமைப்புடன் அமெரிக்காவுக்கு இருந்து வந்த 78 ஆண்டு தொடர்பு முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவால் உலகளவில் ஏற்படும் நோய் பரவல், விஞ்ஞானிகளின் பங்களிப்பு, மருந்து நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பது போன்ற பணிகள் கடுமையாக பாதிக்கும் என்று ஜார்ஜ் டவுண் பல்கலைக்கழக பொது சுகாதார சட்ட நிபுணர் லாரன்ஸ் கோஸ்டின் கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் விலகலால் உலகளவில் போலியோ ஒழிப்பு, குழந்தைகள் உடல்நலம், புதிய வைரஸ் பரவினால் உடனடியாக ஆராய்ச்சி மேற்கொண்டு தடுப்பூசி தயாரித்தல் போன்ற பணிகள் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர். இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.