சிவகங்கை, செப். 26
தனியார் உணவகங்கள் அரசின் உணவுப் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் உணவகங்களுக்கான பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து உணவு வணிகர்களும் [https://foscos.fssai.gov.in](https://foscos.fssai.gov.in)** என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
உணவு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் **தண்ணீரை பகுப்பாய்வு செய்து, அதற்கான அறிக்கையை வைத்திருக்க வேண்டும்.உணவுப் பொருட்களில் ஈக்கள், பூச்சிகள் மொய்க்காத வகையில் அவற்றை கண்ணாடிப் பெட்டிகளில் மூடி வைத்து காட்சிப்படுத்த வேண்டும்.
மேலும், உணவு எண்ணெயை ஒருமுறை மட்டுமே சமைக்க பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய மீதமான உணவு எண்ணெயை, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் அங்கீகரித்த கொள்முதலாளருக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
விற்பனையாகாமல் மீதமாகும் உணவை நுகர்வோருக்கு வழங்காமல் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். நியூஸ் பேப்பர் போன்ற அச்சிடப்பட்ட காகிதங்கள் உணவுப் பொருட்களுடன் நேரடியாக படும் வகையில் உணவை பரிமாறவோ அல்லது பொட்டலமிடவோ கூடாது.
அனுமதிக்கப்படாத நெகிழிப் பொருட்களில் உணவுப் பொருட்களை சூடாகவோ அல்லது இயல்பு நிலையிலோ பொட்டலமிடக் கூடாது.
பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களை கொள்முதல் அல்லது விற்பனை செய்யும்போது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் உரிம எண் உள்ளிட்ட முழுமையான லேபிள் விவரங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து உணவு வணிகர்களும் முறையாக பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை மீறினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.