ஈரானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதற்கிடையே, இந்தியக் குடிமக்கள் மறு உத்தரவு வரும் வரை ஈரானுக்குப் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், ஈரானில் உள்ள இந்தியர்கள் அங்கு கிடைக்கும் எந்தவொரு போக்குவரத்து வசதியை பயன்படுத்தி உடனே நாட்டை விட்டு வெளியேறும்படி டெக்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியது. ஈரானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் கையாளும்படி வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்குப் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
முதல் கட்டமாக அங்குள்ள இந்தியர்கள் விமானங்கள் மூலம் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிலைமை மேலும் மோசமடைந்தால், அவர்களை மீட்க இந்திய விமானப்படை மற்றும் இந்தியக் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.