சென்னை: விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று 23 கோடியே 67 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபம், 125 நபர்கள் ஒரேநேரத்தில் அமர்ந்து உணவருந்தும் வகையிலான அன்னதானக் கூடம், 25 நபர்கள் அமர்ந்து உணவருந்தும் வகையிலான 24 விருந்து மண்டபங்கள் மற்றும் 235 பூஜைப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றைப் பக்தர்களின் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார். மேலும் இந்து சமய அறநிலையத்துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 36 உதவிப் பொறியாளர்கள் (கட்டுமானம்),38 உதவி ஸ்தபதிகள், 6 செயல் அலுவலர்கள் (நிலை-1 மற்றும் நிலை-3) என மொத்தம் 80 நபர்களுக்கு முதலமைச்சர் பணிநியமன ஆணைகளை இன்று வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், தலைமைச் செயலாளர் சாய்குமார், வணிகவரி, பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணைய வினய், கூடுதல் ஆணையர்கள் முனைவர் துரை ரவிச்சந்திரன், ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.