இண்டியா கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சியை அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமீபகாலமாக தமிழகத்தில் காலூன்ற முடியாத பா.ஜ.க.வை சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி கூட்டணி அமைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கொண்டு வருகிறார். அந்த கூட்டணியில் சேர விரும்பாதவர்களை வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி, அச்சுறுத்தி கூட்டணியில் சேர நிர்ப்பந்தம் செய்யப்படுகிறார்கள்.
மத்திய பா.ஜ.க. அரசின் அடக்குமுறையினால் பாதிக்கப்படாத அரசியல் கட்சிகள் தமிழகத்தில் இல்லை என்று கூறுகிற அளவிற்கு அவர்களது நடவடிக்கை அமைந்திருக்கிறது. திருப்பரங்குன்றம் உள்ளிட்ட விஷயங்களை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். கொள்கை சார்ந்த மதவாத, வகுப்புவாத சக்திகளை தமிழகத்தில் காலூன்ற முடியாத அளவிற்கு தடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது
இண்டியா கூட்டணியை பலகீனப்படுத்துகிற முயற்சியின் மூலம் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு பின்னடைவு ஏற்படுத்துவற்கு எந்த வகையிலும் காங்கிரஸ் கட்சியினர் அனுமதிக்கக் கூடாது. சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியபடி, காங்கிரஸ் கட்சி அமைத்த ஐவர் குழுவினர் தி.மு.க.வுடன் முதற்கட்டமாக பேசியிருக்கிறார்கள். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை, அகில இந்திய காங்கிரஸ் தலைமையோடு கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய நிலையில், இதுகுறித்து பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் எவரும் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.