முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கர்நாடக மாநிலத்தில் நேற்று சட்டமன்றத் கூட்டத் தொடர் தொடங்கியது. வரும் 31-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறுகிறது. கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று மரபுப்படி அம்மாநில கவர்னர் தவார்சந்த் கெலாட் உரையுடன் அவை தொடங்க இருந்தது. தனது உரையில் 2 வரிகளை மட்டுமே வாசித்த அம்மாநில கவர்னர் கெலாட், சட்டென உரையை நிறுத்தி அவையை விட்டு அவசர அவசரமாக வெளியேறினார்.
வழக்கமாக கவர்னர் வாசிக்க வேண்டிய உரையை மாநில அரசு தயாரிக்கும். அந்த வகையில் கர்நாடக அரசு தயாரித்த உரையில் 11 பத்திகளில் கவர்னர் கெலாட்டுக்கு உடன்பாடு இல்லையாம். ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கம் செய்து மத்திய அரசு கொண்டு வந்த வி.பி. ஜி ராம் ஜி சட்டத்திற்கு எதிர்ப்பு உட்பட மத்திய அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் அந்த உரையில் இடம்பெற்றுள்ளதால் அதை வாசிக்க மறுத்து கெலாட் அவையை விட்டு வெளியேறி உள்ளார்.
முன்னதாக தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடினார்கள். தேசிய கீதம் பாடவில்லை என கூறி கவர்னர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் 4-வது ஆண்டாக வெளியேறினார். அதே போல் கேரள சட்டமன்றத்திலும் அரசுக்கும் கவர்னருக்கும் உரையில் வேறுபாடு எழுந்தது. இந்த நிலையில் கர்நாடகாவிலும் கவர்னர் உரையை புறக்கணித்து வெளியேறி உள்ளார். இதன் மூலம் தென் மாநிலங்களில் ஆளும் அரசுகளுடன் கவர்னர்களை வைத்து மத்திய அரசு அரசியல் செய்வதாக விமர்சனம் எழுந்துள்ளது.