சென்னை: தமிழ்நாட்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிப்பதில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறி, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் அ. மலைக்கொழுந்தன், அக்டோபர் 8-ம் தேதி பள்ளிக் கல்வித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரகத்திடம் புகார் மனு அளித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, 2025–26 கல்வியாண்டில் கரூர், நாமக்கல், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட வினாத்தாள் கட்டண விவரங்களில் வேறுபாடுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் ரூ.1.27 கோடி, நாமக்கல் மாவட்டத்தில் ரூ.1.36 கோடி, திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.1.30 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.3.93 கோடி வசூல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் வகுப்பைப் பொறுத்து ரூ.80 முதல் ரூ.120 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களிடம் கரூரில் ரூ.120, நாமக்கல்லில் ரூ.122, திருவள்ளூரில் ரூ.119 வசூலிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணம் வசூலிப்பதற்கான சட்டப்பூர்வ அடிப்படை, பணம் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள், வினாத்தாள் அச்சிடுவதற்கான ஒப்பந்தங்கள் மற்றும் செலவினங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், வாகனப் பழுதுபார்ப்பு, சட்டக் கட்டணங்கள் மற்றும் அலுவலகச் செலவுகள் உள்ளிட்டவற்றுக்காக வசூலிக்கப்பட்ட தொகை தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், மாவட்ட வாரியாக கணக்குத் தணிக்கை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக செப்டம்பர் மாதம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆசிரியர் சங்கக் கூட்டத்திலும் கேள்வி எழுப்பப்பட்டதாகவும், இனி இதுபோன்ற கட்டண வசூல் நடைபெறாது என அமைச்சர் உறுதியளித்தபோதிலும், நடப்பு கல்வியாண்டிலும் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.