நீர்வளத்துறை டெண்டர் கோரலில் தங்களது மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை 3 வாரங்களுக்குள் பரிசீலித்து உத்தரவிடுமாறு தமிழக நீர்வளத்துறைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த 'எம்/எஸ். சாய் அஜய் பில்டர்ஸ்' நிறுவனத்தின் பங்குதாரர் பி. கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், நீர்வளத்துறை வெளியிட்ட அரசாணை G.O.(D) No.182 (தேதி: 17.08.2026)-ன் கீழ் பணி எண்கள் 118, 117, 61, 56 மற்றும் 41 ஆகிய டெண்டர் பணிகளில் எவ்வித காரணமும் இன்றி தங்களது மனு நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்ட விதிகளுக்கு எதிரானது என்றும், தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்ட டெண்டர்களை ரத்து செய்து தங்களுக்கு வழங்கக் கோரியும், இது தொடர்பாக கடந்த 29.09.2026 அன்று அளிக்கப்பட்ட மனுவின் மீது விசாரணை நடத்த நீர்வளத்துறைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

இவ்வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் இந்து கருணாகரன், மனுதாரர் நிறுவனத்திற்கு ஒரு பணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தொழில்நுட்ப ஏலத்தில் (Technical Bid) தகுதி பெறாததால் பிற பணிகள் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி. இளங்கோவன், மனுதாரரின் 29.09.2026 நாளிட்ட புகாரைக் குறிப்பிட்ட காலவரையறைக்குள் பரிசீலிக்க உத்தரவிட்டாலே போதுமானது எனத் தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பி.டி. ஆஷா, மனுதாரர் அளித்த புகாரைப் பரிசீலித்து உத்தரவு நகல் கிடைக்கப்பெற்ற நாளில் இருந்து 3 வார காலத்திற்குள் சட்டத்திற்கும் தகுதிக்கும் உட்பட்டு உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு முதல் எதிர்மனுதாரரான நீர்வளத்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.