அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (போக்டா) சார்பாக தொடர் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். அரசு டாக்டர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 354 அரசாணையை மறுவரையறை செய்ய வேண்டும் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு படி ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இந்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து அரசு ஜனநாயக டாக்டர்கள் சங்கங்க ளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
நீண்ட காலமாக நாங்கள் முன் வைத்துள்ள கோரிக்கையை அரசு இதுவரை பரிசீலிக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினோம். அவர் வரும் 19-ம் தேதி இதுகுறித்து நிதித்துறை செயலாளர் இடம் பேசி முடிவு அறிவிப்பதாக கூறியுள்ளார். 19-ம் தேதி எங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படாவிட்டால் 20-ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம்.
முதல் கட்டமாக 48 மணி நேரம் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்படும், பின்னர் புறநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டம், அதனைத் தொடர்ந்து சாகும் வரை போராட்டம், காலவரையற்ற வேலை நிறுத்தம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் நலன் பாதிக்காத வகையில் அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும். பொங்கலுக்குள் எங்களுக்கு தீர்வு கிடைக்குமா? என்று பார்ப்போம். ஆனால் பொங்கல் முடிந்த பிறகு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவை அறிவிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.