மதுரை, அக். 4-

அரசு பணியாளர்கள் லஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகளில் தங்கள் மீது எடுக்கப்பட்ட பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடி

க்கைகளை நிறுத்தி வைக்கவும், ரத்து செய்யவும் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை தாமதப்படுத்தக்கூடாது என எச்சரித்துள்ளது.

அரசு பணியாளர்கள் லஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகளில் தங்கள் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கவும், ரத்து செய்யவும் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “அரசு ஊழியர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட போதிலும் தொடர்ந்து பணியில் இருக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், பல ஆண்டுகளாக அவர்களுக்கு ‘பிழைப்பூதியம்’ வழங்கப்பட்டு வருவதை காண முடிகிறது. ஒரு குற்றவியல் வழக்கு நிலுவையில் இருப்பது பணிசார் தவறுகளுக்கான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடையாக இருக்காது. அரசு அதிகாரிகளின் ஊழல் வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் வைக்கப்படுவது தொடர்பாக விளக்கம் அளிக்க கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதன்படி அவர் ஆஜராகி, கிரிமினல் வழக்கு நிலுவையில் இருக்கும்போது உரிய அரசு பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கையை நிறுத்தி வைக்க வழிவகை உள்ளது என்று தெரிவித்தார். அவரது வாதத்தை இந்த நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. குற்றவியல் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டுகள் சம்பந்தப்பட்டிரு

க்கும்போது, ஒரே நேரத்தில் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எந்த சட்டத்தையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

ஒரு கிரிமினல் வழக்கு நிலுவையில் இருப்பது மட்டுமே, ஒழுங்கு நடவடிக்கையை நிறுத்தி வைப்பதற்கான காரணமாக அமையாது. அரசாங்கத்தின் இத்தகைய அணுகுமுறை நிர்வாகத்தின் நலனுக்கோ அல்லது பொதுச்சேவையில் திறனை மேம்படுத்துவதற்கோ உதவாது. மாறாக, இது தவறு செய்த அதிகாரிகள் தங்கள் தவறான நடத்தையின் விளைவுகளிலிருந்து தப்பிக்கவோ அல்லது அவற்றை தாமதப்படுத்தவோ வழிவகுக்கும்.

குற்றப் பின்னணி கொண்ட ஒருவர் அரசுப் பணியில் சேர்வது நிர்வாகத்தின் தூய்மையை பாதிப்பதாக கருதப்படும் நிலையில், பணியில் உள்ள அரசு ஊழியர் ஒருவர் குற்றவியல் வழக்கில், குறிப்பாக அலுவலக கடமைகளை நிறைவேற்றும்போது எழும் ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதை எவ்வகையிலும் உதாரணமாக அணுக முடியாது.

சொல்லப்போனால், அத்தகைய நபர் மீது உரிய நேரத்தில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படாமல் அவர் தொடர்ந்து பணியில் நீடிப்பது, நிர்வாகத்தின் தூய்மை, செயல்பாடு மற்றும் நற்பெயர் ஆகியவற்றின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே லஞ்ச மற்றும் ஊழல் வழக்குகளை பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்க அனுமதிப்பது, அரசு ஊழியர்களுக்கான நேர்மை மற்றும் நடத்தை நெறிமுறைகள் வகுக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைத்துவிடும். நடத்தை விதிகளை மீறும் மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது ஊழலுக்கு எதிரான வலுவான செய்தியை அளிப்பதோடு, பிற அதிகாரிகளும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும்.

எனவே, தமிழக அரசு இப்பிரச்சனையில் உரிய முடிவை எடுத்து, அரசுப்பணி விதிகளில் தேவையான திருத்தங்களை கொண்டுவரும் என்று இந்த நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. சம்பந்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள் மனுதாரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கி, 6 மாதத்தில் முடிக்க வேண்டும். தவறினால் உரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறினார்.