மதுரை, செப். 23-
பத்திரிகையாளர்களுக்கான நலத்திட்டங்களை பரிசீலித்து செயல்படுத்துவதற்காக செயல்பட்டு வரும் பத்திரிகையாளர் நல வாரியத்திற்கு புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் நல உதவித்திட்டங்களை முறையாக செயல்படுத்துவது, வாரியத்தில் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலிப்பது மற்றும் தகுதியான பயனாளிகளைத் தேர்வு செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக இந்த புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்களுக்காக வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் வகையில் ஏற்கனவே பத்திரிகையாளர் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தின் மூலம் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான பயனாளிகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு உரிய நல உதவிகளை வழங்கும் வகையில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உறுப்பினர்கள் யார்?
புதிய குழுவில் அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை, முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் இடம்பெற்றுள்ளனர்.மேலும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, நிலநிர்வாகத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அலுவல் சாரா உறுப்பினர்களாக பத்திரிகை மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த சிலரும் நியமிக்கப்பட்டுள்ளனர். சிவந்தி ஆதித்யன், வேலுச்சாமி, மூத்த ஆசிரியர், புதிய தலைமுறை தொலைக்காட்சி, தம்பி தமிழரசன், தலைமை செய்தி ஆசிரியர், மாலை முரசு தொலைக்காட்சி, அஷோக வர்ஷினி, இணை ஆசிரியர், தந்தி தொலைக்காட்சி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த பத்திரிகையாளர் நல வாரிய புதிய உறுப்பினர்கள் அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் நியமிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.