தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 மாத கால இடைவெளியே இருக்கின்றன. அடுத்த மாதம் இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே வேட்புமனு தாக்கலுக்கான பணிகள் தொடங்கி விடும். இந்த முறை தமிழகத்தில் 4 முனைப்போட்டி நிலவுவது உறுதியாகியுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் 3 முறை சட்டசபை தேர்தலில் களம் கண்ட தே.மு.தி.க., 4-வது முறையாக போட்டியிட இருக்கும் நிலையில், இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

அதாவது, ஆளுங்கட்சியான தி.மு.க.வுடனும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுடனும் ஒரே நேரத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறது. ஆரம்பத்தில் இரு தரப்பிலும் 30 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் வேண்டும் என்று தே.மு.தி.க. அதிர வைத்தது. மேலும், தேர்தல் செலவுக்கும் தொகுதிக்கு ரூ.10 கோடி வீதம் வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் சுதாரித்துக்கொண்டு, தே.மு.தி.க.வுக்கு ஆரம்பத்தில் இருந்த வாக்கு சதவீதம் 10.5. ஆனால் இப்போது ஒரு சதவீதத்திற்கும் கீழ் வந்து விட்டது. மேலும், முக்கிய நிர்வாகிகள் பலரும் வெளியேறி விட்டனர். எனவே, அதிகமான தொகுதிகள் எல்லாம் தரமுடியாது என்று கறாராக கூறிவிட்டதாம்.

அதன்பிறகு, படிப்படியாக இறங்கி வந்த தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இறுதியாக இரட்டை இலக்கத்தில் தொடக்க எண்ணான 10 விரலை காட்டி நிற்கிறாராம். ஆனால், தி.மு.க. தரப்பில் 6 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை சீட்டும், அ.தி.மு.க. தரப்பில் 8 தொகுதிகள், மாநிலங்களவை சீட்டை பிறகு பேசலாம் என்றும் கூறப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால், இன்னும் தே.மு.தி.க. தனது கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்து வருகிறது. இனி, தே.மு.தி.க. இறங்கி வந்தால் மட்டுமே தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இருதரப்பிலும் கூட்டணி கதவுகள் திறக்கப்படும் என்று தெரிகிறது.