விமான விபத்தில் சிக்கி, மகராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் பலியான நிலையில், அவரது இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றன. இந்த நிலையில், அவரது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருக்கும் 40 எம்.எல்.ஏ.க்களும் தொடர்ந்து பா.ஜ.க. - ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனை இணைந்த மகாயுதி கூட்டணியிலேயே நீடிப்பதா அல்லது மீண்டும் சரத் பவாரின் கட்சிக்குத் திரும்புவதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எழுச்சிக்கு அஜீத் பவாரின் பங்களிப்பு மிக முக்கியமாக இருந்தது. எப்போதும் அரசியல் பணியை நோக்கியே தன்னை செலுத்திக் கொண்டிருந்தவர். அடுத்து முதல்வர் நாற்காலி என்ற கனவோடு பயணத்தைத் தொடர்ந்திருந்தார். ஆனால், அந்த பயணம் விமான விபத்தால் நிறைவேறாமல் முடிவுற்றிருக்கிறது. அதுவும் உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொள்ளும்போதுதான் அவர் மரணித்திருக்கிறார்.

மகராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக நான்கு முறை பதவி வகித்த சரத் பவாரின் உறவினர்தான் அஜீத் பவார். அதாவது, அஜீத் பவாரின் தந்தை, சரத் பவாரின் சகோதரர். சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, குடும்பத்தை முன்னிலைப்படுத்தியே உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியாக இருந்தது. அதன்படியே சரத்பவாரின் வழிகாட்டுதலோடு அரசியலுக்கு வந்த அஜீத் பவார், 1991-ம் ஆண்டு பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் பாராமதி மக்களவைத் தொகுதியில் வென்று எம்.பி. ஆனபோது, அஜீத் பவாருக்கு வயது வெறும் 32 தான் என்பது குறிப்பிடத்தக்கது.