அமித்ஷா:- விமான விபத்தில் மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். கடந்த மூன்றரை தசாப்தங்களாக மராட்டியத்தின் ஒவ்வொரு பிரிவின் நலனுக்காகவும் அஜித் பவார் அர்ப்பணித்த அர்ப்பணிப்பை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. நாங்கள் சந்திக்கும் போதெல்லாம், மராட்டிய மக்களின் நலன் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் நீண்ட விவாதங்களை நடத்துவார்.
அவரது மறைவு எனக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி குடும்பத்திற்கும் ஒரு தனிப்பட்ட இழப்பாகும். பவார் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில், முழு தேசிய ஜனநாயகக் கூட்டணியும் அவரை இழந்து வாடும் பவார் குடும்பத்தினருடன் உறுதியாக நிற்கிறது. மறைந்த அஜித் பவாரின் ஆன்மா சாந்தி அடையட்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று தெரிவித்துள்ளார்.
ராஜ்நாத் சிங்:- அஜித் பவாரின் அகால மரணம் குறித்து அறிந்து நான் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தனது நீண்ட பொது வாழ்வில், அவர் மராட்டியத்தின் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டார். அஜித் பவாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி: அஜித் பவார் மரணத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
மகராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் விமான விபத்தில் காலமான செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த துயரமான தருணத்தில் மகராஷ்டிர மக்களுடன் நான் நிற்கிறேன். இந்த துக்க நேரத்தில் பவாரின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்:- விமான விபத்தில் மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் உள்பட 5 பேர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த துயர விபத்தை ஜீரணிப்பது கடினமாக உள்ளது. உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நயினார் நாகேந்திரன்:- இந்திய அளவில் நமது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மராட்டிய துணை முதல்வர் விமான விபத்தில் மரணம் அடைந்தார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவர் குடும்பத்தார்,கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொண்டு அவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி! என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி: மகராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மகராஷ்டிராவின் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவருமான அஜித் பவார், ஒரு துயரமான விபத்தில் விபத்தில் காலமானார். இது மகராஷ்டிராவின் அரசியலுக்கும், மக்களுக்கும் ஒரு பெரிய இழப்பாகும். பரந்த நிர்வாக அனுபவம் மற்றும் தீர்க்கமான தலைமைத்துவத்திற்கு பெயர் பெற்ற அஜித் பவாரின் அகால மறைவு நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுச் செல்கிறது. அவரது குடும்பத்தினர், கட்சியினர் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா நித்திய சாந்தியடையட்டும் என்று கூறியுள்ளார்.