மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அந்த மாநிலத்தின் துணை முதல்வர் அஜித் பவார் சிறிய ரக தனி விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாராமதி பகுதி அருகே தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் அஜித் பவார் உள்பட, விமானத்தில் பயணித்த அவரது பாதுகாவலர்கள் 2 பேர் மற்றும் விமானிகள் 2 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. அஜித் பவாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
அஜித் பவாரின் திடீர் மறைவால் அதிர்ச்சி அடைந்தேன். மராட்டிய துணை முதல்வரும், அவரது சக பயணிகளும் பாராமதியில் நடந்த ஒரு பேரழிவு தரும் விமான விபத்தில் உயிரிழந்தனர். நான் மிகுந்த இழப்பை உணர்கிறேன். அவரது மாமா சரத் பவார் உட்பட அவரது குடும்பத்தினருக்கும், மறைந்த அஜித் பவாரின் அனைத்து நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்து சம்பவம் குறித்து முறையான விசாரணை தேவை. இவ்வாறு அந்த பதிவில் மம்தா தெரிவித்துள்ளார்.