டெல்லி, செப். 26-
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நாளைக்குள் தனது பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், அக்டோபர் 2ம் தேதி மும்பை நாடு தழுவிய போராட்டத்தை தொடங்க உள்ளதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே அறிவித்துள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையரின் முடிவுகள் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக உள்ள ஞானேஷ் குமார் எடுத்த சில முடிவுகளுக்கு மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் ஆட்சேபனை தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர். கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை இதுபோல ஆட்சேபனை
களை பதிவு செய்ததாக தகவல் வெளியானது.
இந்த விவகாரம் இப்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இதில் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நேற்று டெல்லியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறியது. மேலும், இதற்கு 48 மணி நேர கெடு விதித்திருந்தது. இந்த காலக்கெடுவுக்குள் அவர் பதவி விலகவில்லை என்றால் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் கரப்பான் கட்சி ஒருங்கிணைப்பாளர் அபிஜீத் திப்கே அறிவித்திருந்தார்.
நேற்றைய செய்தியாளர் சந்திப்பில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை அபிஜீத் திப்கே முன்வைத்திருந்தார். தேர்தல் செயல்முறையில் முறைகேடுகள் நடப்பதாகவும், யார் வாக்களிக்க முடியும், யார் வாக்களிக்க முடியாது என்பதை தீர்மானிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே நாளைக்குள் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் அபிஜீத் திப்கே மீண்டும் ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக அவர், “ஞானேஷ் குமார் நாளைக்குள் ராஜினாமா செய்யவில்லை என்றால், அக்டோபர் 2-ம் தேதி மும்பையில் இருந்து நாடு தழுவிய போராட்டத்தை தொடங்குவோம். இந்த காந்தி ஜெயந்தியில் ஜனநாயகத்தை காப்போம் என உறுதியேற்போம்” என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் இப்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.