இயக்குநர் ஷங்கர் இயக்கவுள்ள வேள்பாரி திரைப்படத்தின் தயாரிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கரின் இந்தியன் - 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூலில் தோல்வியடைந்தது. இதனால், ஒட்டுமொத்த படக்குழுவினரும் அதிருப்தியடைந்தனர். அடுத்ததாக, கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் - 3 படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதில், ராம் சரண் நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படமும் தோல்வியையே சந்தித்தது. இதனால், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மீதான வணிக பார்வைகளும் மாறத் தொடங்கின.

தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர், எழுத்தாளரும், எம்.பி.யுமான சு. வெங்கடேசன் எழுதிய, வீரயுக நாயகன் வேள்பாரி நாவலைத் திரைப்படமாக்க திட்டமிட்டு அதற்கான எழுத்து பணிகளில் ஈடுபட்டு வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், வேள்பாரியைத் தயாரிக்க பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான பென் மீடியா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.