சென்னை, அக். 6-

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர், திமுக கூட்டணியில் இருந்து தவெக ஆதரவு நிலைப்பாட்டிற்கு மாறிய மதிமுக எப்படியாவது அமைச்சரவையில் இடம்பிடித்து விட வேண்டும் என்று காய் நகர்த்தியது.

ஆனால் களம் யாரும் எதிர்பாராத வகையில் இருந்தது. மதிமுக சார்பில் போட்டியிட்ட கடையநல்லூர் எம்.எல்.ஏ டி.எம்.ராஜேந்திரன், சீர்காழி எம்.எல்.ஏ ஆர்.செந்தில் செல்வன் ஆகிய இருவரும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வென்றிருந்தனர். அதுமட்டுமின்றி தேர்தலுக்கு பிந்தைய அரசியல் மாற்றங்களின் தொடர்ச்சியாக திமுக உடன் உறுதியாக நிற்கின்றனர். கட்சி மாறாத குறை மட்டுமே. மற்றபடி திமுக எம்.எல்.ஏக்களை போல தான் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலும் பங்கேற்றிருந்தனர். இது மதிமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில் கட்சி தலைமைக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இரண்டு எம்.எல்.ஏக்களும் புகார் அளித்த நிகழ்வு அடுத்தகட்ட பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இதுதொடர்பாக திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் சற்றுமுன் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோர் மீது மதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜேந்திரன், செந்தில் செல்வன் ஆகியோர் மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மதிமுக எம்.எல்.ஏக்கள் இருவரும் புகார் அளித்துள்ளனர். அதில், தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தினர் எனக் கூறியுள்ளனர்.