உசிலம்பட்டி: தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், பசியின்றி மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்து கல்வியில் முழு கவனம் செலுத்துவதை உறுதி செய்யவும் செயல்படுத்தப்பட்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்', தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களால் 22.09.2026 அன்று சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டம், மதுரை மாவட்டம் மற்றும் உசிலம்பட்டி பகுதியிலும் வெகுசிறப்பாகக் கொண்டு சேர்க்கப்பட்டு முத்திரை பதித்து வருகிறது.
தமிழ்நாடு அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசாணை நிலை எண்: 20-ன் படி இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவியர்கள் கூடுதலாகப் பயனடைவர். இத்திட்ட விரிவாக்கத்திற்காக நடப்பு நிதியாண்டில் கூடுதலாக 217 கோடியே 63 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக 724 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட அளவிலான இத்திட்ட விரிவாக்கத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் உள்ள 400 பள்ளிகள் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள 174 பள்ளிகள் என மொத்தம் 574 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 69,730 மாணவ, மாணவியர் தினசரி காலை உணவு பெற்றுப் பயனடைய உள்ளனர். இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் வகையில், கடந்த 11.09.2026 அன்று அனைத்து 574 பள்ளிகளிலும் முன்னோட்டச் சோதனை (Trial Run) வெற்றிகரமாக நடத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டது.
திட்டம் முறைப்படி தொடங்கப்பட்ட முதல் நாளில் பயனடையும் அனைத்து மாணவர்களுக்கும் தொடக்க நாள் சிறப்பு உணவாக வெண்பொங்கல், காய்கறி சாம்பார் மற்றும் இனிப்புப் பொங்கல் பரிமாறப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்ககம் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன சுய உதவிக் குழுக்கள் மூலமாக மாணவர்களுக்குச் சுத்தமான மற்றும் சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. மாணவர்களின் உடல்நலம், ஊட்டச்சத்து, பள்ளி வருகை மற்றும் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதன்படி உசிலம்பட்டி, சேடப்பட்டி, செல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 4,500-க்கும் அதிகமான மாணவ, மாணவிகளுக்கு தினசரி காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த காலை உணவுத் திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாக இருப்பதாகவும், இதனை செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.
மாணவர்களின் கல்வி மற்றும் உடல் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், முதலமைச்சரின் கனவுத் திட்டங்களில் ஒன்றாக திகழ்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.