மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் சீர்மிகு சட்டப்பள்ளியின் தரத்திற்கு இணையாக, தென் மாவட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் மதுரை மாவட்டத்தில் புதிய சீர்மிகு அரசு சட்டக்கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் அறிவித்தார்.
மதுரை சட்டக்கல்லூரி முதல்வர் முனைவர் ப.குமரன் தெரிவிக்கையில்,
மாண்புமிகு தமிழக சட்டத்துறை அமைச்சர் அவர்கள் பட்ஜெட்டில் மதுரை மாவட்டத்தில் புதிய அரசு சட்டக்கல்லூரி அமையவுள்ளது என தெரிவித்துள்ளார்கள். சென்னை அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் நடைபெறுகின்ற சீர்மிகு சட்டப்பள்ளிக்கு இணையாக மதுரையில் தோற்றுவிக்கப்படும் சட்டக்கல்லூரி 2027 -28 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தென் மாவட்ட மாணவர்களின் நலனைக்கருதியும், மாணவர்கள் சென்னைக்குச் செல்வதை தவிர்க்கும் பொருட்டும், நிதிச்சுமையை குறைக்கும் பொருட்டும் சட்டக்கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் அமையவிருக்கின்ற இந்த சீர்மிகு சட்டக்கல்லூரி B.A., B.L., Honours என்பது மதுரை மாவட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய சிறப்பம்சம் ஆகும். இத்தகைய வாய்ப்பை ஏற்படுத்தி தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதுரை சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் திரு.கார்த்திக் அவர்கள் தெரிவிக்கையில்,
மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் அவர்கள் சமீபத்தில் தமிழக அரசு பட்ஜெட்டில் மதுரை மாவட்டத்தில் சட்டக்கல்லூரி அமைய உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இந்த கல்லூரி இப்போது காலத்தின் தேவை கருதி கட்டாயமாக அமைக்கப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால் சட்டத்துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. சர்வதேச சட்டங்கள் அது சம்பந்தப்பட்ட வகுப்புகள் நடைபெற வேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் இருந்து வருகிறோம். ஒரு சிறப்பு அரசு சட்டக்கல்லூரி தென் மாவட்டத்தில் அமைக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. ஏனென்றால் நம் மாணவர்கள் திறமையிருந்து சென்னை, பெங்களுர் போன்ற ஊர்களுக்குச் சென்று படிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த சூழலில் மதுரையில் இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த தமிழ்நாடு அரசிற்கு சட்டக்கல்லூரியின் சார்பில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மதுரை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் தெரிவிக்கையில்,
சீர்மிகு சட்டகல்லூரி மதுரை மாவட்டத்தில் அமையவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். அதனை மாணவர்கள் சார்பில் நாங்கள் பெரிதும் வரவேற்கின்றோம். மெட்ராஸ் உயர்நீதி மன்றம் மதுரை கிளை மதுரையில் அமைந்து தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது அதுபோல் இந்த சட்டக்கல்லூரியும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாணவர்கள் சார்பிலும், மதுரை மாவட்ட அரசு சட்டக்கல்லூரி சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.