சென்னை: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதனால் இன்றும் நாளையும் (ஆக. 18, 19) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். 18-08-2026 முதல் 22-08-2026 வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக் கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.