ஈரோடு, அக். 15-
தமிழ்நாட்டில் புதிய அரசு ஆட்சி அமைந்து 5 மாதங்கள் கடந்தும், ஈரோடு மாவட்டத்தில் அரசின் வளர்ச்சி பணிகள் பல்வேறு இடங்களில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக எம்பி பிரகாஷ் குற்றம்சாட்டி
யுள்ளார்.
ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஈரோடு எம்பி பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கந்தசாமி, திருப்பூர் எம்பி சுப்பராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணி, சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் பணி, தூய்மை இந்தியா திட்டத்தில் மேற்கொள்ளப்படும் வரும் பணி, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், விக்சித் பாரத்-வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தின் உத்தரவாத திட்டம் பணிகள், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மேயர் நாகரத்தினம் உள்ளிட்ட பலர் உள்ளனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து எம்பி பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு வந்த பின் நடக்கும் 2வது கூட்டம் இதுவாகும். கடந்த 5 மாத காலத்தில் ஈரோடு மாநகர மற்றும் மாவட்ட அளவிலான வளர்ச்சி பணிகள் குறிப்பாக ஒன்றிய அரசின் நிதி மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளில் பல இடங்களில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தாலும், மாநில அரசின் ஒத்துழைப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.
உதாரணமாக ஏற்கனவே டெண்டர் போடப்பட்ட சாலைப்பணிகள் நிறுத்தி வைத்தும், பில்களுக்கான நிதி விடுவிக்காமலும், வழங்காமலும் உள்ளனர். சாலைகள் அனைத்தும் மோசமாக உள்ளது. புதிய திட்டங்கள் ஏதும் கடந்த 5 மாதங்களாக அறிவிக்கப்படாமல் அப்படியே முடக்கி வைத்துள்ளனர்.
வரும் காலங்களில் ஆளும் அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியை தவிர்த்து, மாவட்ட வளர்ச்சிக்கான பணிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும். மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதுடன் விவசாயிகளுக்கு பாசன நீர் வழங்கும் விவகாரம் பெரும் போராட்டமாக உருவெடுத்துள்ளது.
உள்ளூர் எம்எல்ஏ.க்களும், அமைச்சர்களும் இருந்தும், எந்த ஒரு முயற்சியும், முத்தரப்பு கூட்டமும் போடாமல் அரசு நிர்வாகம் மெத்தனமாகச் செயல்படுகிறது.
விவசாயிகளின் தேவைகளை உடனடியாக கண்டறிந்து உரிய தீர்வுகளையும், வசதிகளையும் செய்து தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். குறிப்பாக கரூர் சாலை மற்றும் வெள்ளகோவில் சாலைப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு வெண்டிப்
பாளையம் குப்பை கிடங்கில் பயோ மைனிங் முறையில் கழிவுகளை அகற்றும் பணியை புதிய அரசு கடந்த 6 மாதங்களாக தொடங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. ஆனால், இதற்கு கடந்த திமுக ஆட்சியில் செய்யவில்லை என குறை கூறுகின்றனர்.
தமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்னை தீவிரமடைந்துள்ளது. தலைமை செயலகத்திலேயே மின்வெட்டு ஏற்பட்டுள்ள அவல நிலை நிலவுகிறது. அதற்கு என்ன விளக்கம் சொல்வார்கள் என தெரியவில்லை. இதற்கும் திமுக மீதுதான் பழிபோடுவார்கள். ஜல் ஜீவன் திட்டத்தில் இறுதிக்கட்ட பணிகள் இன்னும் நிறைவடையாமல் நிலுவையில் உள்ளதால் அவற்றை விரைந்து முடிக்கக் கேட்டுக்கொண்டு
ள்ளோம்.
ஈரோடு காளை மாட்டு சிலை பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக 6 மாதங்களுக்கு முன்பு ஒரு நிறுவனம் தயாரித்த விரிவான திட்ட அறிக்கை திருப்திகரமாக இல்லாததால், தற்போது புதிய அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதிய அறிக்கை தயாரானதும் விரைவில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.இவ்வாறு எம்பி பிரகாஷ் கூறினார்.