பார்லிமெண்ட் என்பது ரவுடித்தனம் செய்வதற்கான இடமில்லை. எதிர்க்கட்சியினர் இது போன்று செயல்பட்ட போதிலும் அரசு நிதானத்துடன் செயல்பட்டு வருகிறது என்று பாராளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்தார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, லோக்சபாவில் ஏற்படும் கடும் அமளிகளுக்கு காங்கிரஸ்தான் காரணம். எதிர்க்கட்சியினர் அவையை செயல்பட விடாததால் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடக்கவில்லை. லோக்சபாவில் ஆக்கபூர்வமான விவாதம் நடக்க வேண்டும் என்பதை ராகுல் விரும்பவில்லை என்று நினைக்கிறேன். அவரது பிடிவாதத்தால் அவை நடவடிக்கைகள் முடக்கப்படுகின்றன.
காங்கிரஸ் எம்.பி.க்களின் நடத்தையால் சபாநாயகர் ஓம் பிர்லா மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். அரசு விவாதம் நடத்த ஆர்வமாக இருக்கிறது. ஆனால் இதே போன்று தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தினால் முக்கிய விவாதங்களை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் பட்ஜெட் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும். அப்படி செய்தால் எதிர்க்கட்சியினர் பேசுவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும். இதற்கு காங்கிரஸ் கட்சிதான் பொறுப்பு. பட்ஜெட் விவாதத்தில் பேச வேண்டிய என்.டி.ஏ. கூட்டணி உறுப்பினர்களின் பட்டியலை அரசு ஏற்கனவே சமர்ப்பித்து விட்டது.
பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என்று சபாநாயகர் கூறியது சரியானதுதான். பிரதமர் அவைக்கு வரும் போது அவரிடம் இருந்து காகிதங்களை பிடுங்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பார்லிமெண்ட் என்பது ரவுடித்தனம் செய்வதற்கான இடமில்லை. எதிர்க்கட்சியினர் இதுபோன்று செயல்பட்ட போதிலும் அரசு நிதானத்துடன் செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.