மதுரை, அக். 8-

மதுரை மாநகராட்சியில் துாய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ‘பணிக்கு அழைத்தால் தொழில்நுட்ப உதவியாளர்களை (டி.ஏ.,க்கள்) அடித்து உதையுங்கள்’ என்ற போராட்ட பணியாளரின் வாட்ஸ் அப் ஆடியோ மிரட்டல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாநகராட்சியில் துாய்மை பணி மேற்கொள்ளும் அவர் லேண்ட் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், பாதாளச் சாக்கடை பராமரிப்பை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான துாய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து, நேற்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வார்டுகளில் குப்பை குவிந்து சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் பாதாளச் சாக்கடை பராமரிப்பு பணிகள் முடங்கியுள்ளன.

இந்நிலையில், பொறியியல் பிரிவுக்கு உட்பட்ட ஏ.இ., டி.ஏ.,க்கள் சிலர் பாதாளச் சாக்கடை பராமரிப்பு பணியாளர் சிலரை பணிக்கு அழைத்துள்ளனர். இத்தகவல் போராட்ட சங்க நிர்வாகிகளுக்கு சென்றது. இதையடுத்து பாதாளச் சாக்கடை பராமரிப்பு பணியாளர் ஒருவர் வாட்ஸ் குரூப்பில் ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், ‘பாதாளச் சாக்கடை பராமரிப்பை தனியாருக்கு விடக்கூடாது என்பதால்தான் இந்த போராட்டம். சங்கம் சொல்லும் வரை யாரும் வேலைக்கு செல்ல கூடாது. உங்களுக்காகவே நிர்வாகிகள் சென்னை சென்று பேச்சு நடத்துகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை பணிக்கு அழைத்தால் ‘டெக்னிக்களை’ (டி.ஏ.,க்கள்) சந்துக்குள் வைத்து அடியுங்கள். எது வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்ற மிரட்டும் ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாநகராட்சி தொழில்நுட்ப உதவியாளர்கள் சங்க இணைத் தலைவர் மோத்தீஸ் கூறுகையில், அந்த மிரட்டல் விடுத்தவர் சரவணன், 51வது வார்டு பாதாளச் சாக்கடை பராமரிப்புப் பணியாளர், சங்க நிர்வாகியாகவும் உள்ளார். சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்து, ‘அந்த நபர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என அவகாசம் அளித்துள்ளோம். கேட்காவிடில் கமிஷனர் கவனத்திற்கு கொண்டுசென்று போலீசில் புகார் அளிக்கப்படும் என்றார்.

இச்சம்பவத்தால் பணியாளர்கள் – டி.ஏ.,க்களுக்கு இடையேயான போராட்டமாக துாய்மைப் பணியாளர்கள் போராட்டம் மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. கமிஷனர் கவுரவ்குமார் முற்றுப்புள்ளி வைப்பாரா.