செஷல்ஸ் நாட்டின் அதிபராக கடந்தாண்டு பதவியேற்ற பேட்ரிக் ஹொ்மினி, முதல்முறையாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்த அவரை தமிழக அமைச்சர் மதிவேந்தன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர். இந்தியாவுக்கு 7 நாள்கள் பயணமாக வந்துள்ள பேட்ரிக் ஹெர்மினி, டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்துப் பேசவுள்ளார்.

தொடர்ந்து, பிரதமர் மோடியுடன் சர்வதேச பிரச்னைகள், இருநாட்டு உறவுகள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஹெர்மினியை வரவேற்று வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நீண்டகால மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியா - செஷல்ஸ் இருதரப்பு உறவுகளின் 50 ஆண்டுகளை நினைவுகூர்கிறோம். இந்தியாவுக்கான தனது முதல் அரசுமுறை பயணமாக சென்னைக்கு வருகை தந்துள்ள செஷல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியை அன்புடன் வரவேற்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவுள்ளார். முன்னதாக, செஷல்ஸில் நடைபெற்ற பேட்ரிக் ஹொ்மினியின் பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.