எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரத்தில் பிரதமர் மோடியின் பெயரும் குறிப்பிடப்பட்டிருப்பது பற்றி மக்களவையில் விவாதிக்கக் கோரி காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் பெரும் பணக்காரரான ஜெப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த நிலையில், தற்போது அவரின் குற்றச் செயல்கள் அடங்கிய சுமார் 30 லட்ச பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், புகைப்படங்கள், விடியோக்கள் அடங்கிய எப்ஸ்டீன் கோப்புகளை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பிரதமர் மோடி மற்றும் அவரது இஸ்ரேல் பயணம் குறித்து சில மின்னஞ்சல் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு தரப்பில் இருந்து மறுப்பு செய்தி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், மக்களவையில் எப்ஸ்டீன் கோப்புகளின் மோடியின் பெயர் இடம்பெற்றது தொடர்பாக விவாதிக்கக் கோரி, காங்கிரஸ் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,
ஜூலை 9, 2017 தேதியிட்ட, எப்ஸ்டீனால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் ஒரு மின்னஞ்சல், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஆகியோர் சம்பந்தப்பட்ட சந்திப்புகள் மற்றும் அதை தொடர்ந்த இஸ்ரேலுக்கான மோடியின் அதிகாரப்பூர்வ பயணம் பற்றி குறிப்பிடுகிறது. இது, தற்போது உலகளவில் பரவி, கடுமையான கேள்விகளையும் ஊகங்களையும் எழுப்புகின்றன. இதுபோன்ற பிரச்னைகள் சர்வதேச அளவில் விவாதிக்கப்படும்போது இந்த அவை மவுனமாக இருக்க முடியாது, மேலும் மத்திய அரசு ஒரு தெளிவான, திட்டவட்டமான மற்றும் அதிகாரப்பூர்வமான விளக்கத்தை அளிக்கவில்லை. நாங்கள் பிரதமரிடமிருந்து பதில்களை கோருகிறோம். எப்ஸ்டீனால் குறிப்பிடப்பட்ட தகவல்களின் நம்பகத்தன்மையை மத்திய அரசு சரிபார்த்ததா? எப்ஸ்டீன், இந்திய அரசுடனோ அல்லது மோடியுடனோ எப்போதாவது தொடர்பு கொண்டாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.