2025-ம் ஆண்டில் மட்டும் 270 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2 லட்சம் கோடி முதலீடுகள் பெறப்பட்டதுடன் 4 லட்சம் வேலை வாய்ப்புகளையும் திராவிட மாடல் ஆட்சி உருவாக்கி உள்ளதாக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள வலைதள பதிவில், 2026-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள திராவிட மாடல் அரசின் தொழிற்புரட்சி இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 270 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2.07 லட்சம் கோடி முதலீடுகள் பெறப்பட்டு இருப்பது இதற்கு சான்றாக அமையும். இதனால் 4 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்பு உருவாக்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்கால தொழில்துறைகள் விண்வெளி, மேம்பட்ட மின்னணு உற்பத்தி, ரயில்வே, கப்பல் கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளிலும் தமிழகம் முதலீடுகளை செய்திருப்பதை சுட்டிக் காட்டியுள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, இதற்காக தமிழக அரசு முன்வைத்துள்ள கொள்கைகள் தான் ஒப்பிட முடியாத வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் 50-க்கும் மேற்பட்ட புதிய உலகளாவிய திறன் மையங்கள், செமி கண்டெக்டர்கள் மிஷன் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் உலகளாவிய அறிவு மையமாக தமிழகம் உள்ளதா என்றும் தொழிற்வளர்ச்சியில் இந்தியாவில் முதலிடத்தில் தமிழ்நாடு உள்ளது என்பதை விருதுகள் காட்டுவதாகவும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.