சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்யும் முயற்சியில் தே.மு.தி.க. தீவிரமாக இருக்கிறது. இது தொடர்பாக சென்னையில் வரும் 5-ம் தேதி மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தேமுதிக எந்தப் பக்கம் சாயும் என்பதும் தற்போது விவாதப் பொருளாகி இருக்கிறது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு சந்திக்கும் முதல் சட்டப்பேரவை தேர்தல் என்பதால், தே.மு.தி.க. தனது கூட்டணி நிலைப்பாட்டை இறுதி செய்வதில் மிகுந்த முனைப்பு காட்டி வருகிறது. இதையொட்டி தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வரும் 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது. தொகுதிப் பங்கீடு, தேர்தல் செலவுகள், வெற்றிக் கணக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.