பீகாரில் கடந்த திங்கட்கிழமை அன்று, ஆயுஷ் மருத்துவர்களுக்கான பணி நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. பீகார் தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சம்வாத் என்ற இடத்தில் நடைபெற்ற இந்த விழாவில் 1,283 ஆயுஷ் மருத்துவர்களுக்கு (ஆயுர்வேத, ஹோமியோபதி மற்றும் யுனானி) நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. அங்கு புதிதாக நியமிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவர், ஹிஜாப் அணிந்து நியமனக் கடிதத்தைப் பெற மேடை ஏறினார். அப்போது, மேடையில் நின்றிருந்த முதல்வர் நிதிஷ்குமார், என்ன இது? என்று கூறி அவரது ஹிஜாபைக் கீழே இறக்கினார்.

நிதிஷ் குமாரின் பின்னால் நின்று கொண்டிருந்த பிகார் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி, முதல்வரை தடுக்க முயன்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நிதிஷ் குமாரின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில், நிதிஷ் குமாரின் இந்த செயலுக்கு உ.பி அமைச்சர் சஞ்சய் நிஷாத் சர்சையையான கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சஞ்சய் நிஷாத அளித்த பேட்டி ஒன்றில்,

அவர் ஹிஜாபை இழுக்கவில்லை, நியமனக் கடிதம் சரியான நபருக்கு வழங்கப்படுகிறதா என்பதை சரிபார்க்க அதை இழுத்துள்ளார். இந்த விவகாரத்தை மக்கள் பெரிதாக்கக் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவரும் ஒரு மனிதர், அவரை யாரும் வேட்டையாடக் கூடாது. ஹிஜாப்பை தொட்டது இவ்வளவு சலசலப்பை ஏற்படுத்தியது என்றால், வேறு எங்காவது தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? என்று நேர்காணலின் போது அமைச்சர் சிரித்துக் கொண்டே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இருப்பினும் இந்த சர்ச்சை வீடியோ வைரலானது தொடர்பாக நிதிஷ் குமார் மற்றும் சஞ்சய் நிஷாத் மீது லக்னோவின் கைசர்பாக் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்ய செய்யப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுமையா ராணா, தனது வழக்கறிஞர்களுடன் சென்று, அந்த இரு தலைவர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி புகாரை அளித்துள்ளார்.