நேஷனல் ஹெரால்டு வழக்கு மற்றும் 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம் ஆகியவற்றைக் கண்டித்து கர்நாடகாவின் பெலகாவியில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது.

பெலகாவியில் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில், மாநில அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நேஷனல் ஹெரால்டு வழக்கு மற்றும் 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றத்தைக் கண்டிக்கும் பதாகைகள் மற்றும் மகாத்மா காந்தியின் புகைப்படங்களை ஏந்தியவாறு அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் டி.கே. சிவகுமார், நேஷனல் ஹெரால்டு என்பது நமது நாட்டின் பெருமை. அது நமது சுதந்திரப் போராட்டத்தோடு தொடர்புடையது. ஜவஹர்லால் நேருவால் ஏற்படுத்தப்பட்டது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை என்னை தொடர்புபடுத்தி இருக்கிறது. நான் ஒரே ஒரு கேள்வியை மட்டும் எழுப்புகிறேன். ஏன் அவர்கள் இதுவரை எனக்கு முதல் தகவல் அறிக்கையின் நகலை வழங்கவில்லை? அமலாக்கத் துறையின் முகம் தற்போது கிழிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.