இந்தியாவுக்கு வழிகாட்டும் நிலையில் தமிழகம் இருக்கிறது என சென்னையில் நடந்த காலநிலை மாற்றம் தொடர்பான நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது தொடர்பான குழுவின் 3-வது கூட்டம், சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:
காலநிலை மாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. சுற்றுச்சூழல் தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பசுமை பள்ளி வகுப்பறைகளில் வெப்பநிலையை குறைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. அலையாத்தி மரக்காடுகளின் பரப்பளவு இருமடங்கு அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். சமீபத்தில் டிட்வா புயல் இலங்கையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் திராவிட மாடல் அரசு மேற்கொண்ட உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படாமல் தமிழகத்தை காப்பாற்றியுள்ளோம். நாம் அட்வான்ஸ் ஆக நிறைய பணிகளை செய்து கொண்டு இருக்கிறோம்.
இந்தியாவுக்கு வழிகாட்டும் நிலையில் தமிழகம் இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மிக விரைவில் காலநிலை கல்வி அறிவு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை சுற்றுச்சூழல் குறித்து வழங்கப்படும் பயிற்சியில் காலநிலை மாற்றம் பற்றி எடுத்துரைக்கப்படும். பசுமை பள்ளி வகுப்பறைகளில், வெப்பநிலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 297 பசுமை பள்ளிகளில் கூல் ரூப் திட்டம் செயல்படுத்தப்படும். பொது போக்குவரத்தின் பயன்பாடு குறைவதால் போக்குவரத்து நெரிசல், காற்று மாசு அதிகரிக்கிறது. மக்கள் அதிகளவில் பொது போக்குவரத்தை பயன்படுத்தவேண்டும். தமிழகத்தின் வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் என்பது அரசுக்கு மற்றொரு கண். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.