வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு பெருமாள் கோவில்களில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. அதன்படி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிகோவில், மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சேலம் கோட்டை பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
மேலும் நீடாமங்கலம் சந்தானராமர் கோவில், கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில், சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சென்ராய பெருமாள் கோவில், காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் ஆகிய பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில், பல்வேறு பெருமாள் கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக ராப்பத்து திருவாய்மொழி திருநாள் நேற்று முதல் தொடங்கியது. இதன்படி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து நம்பெருமாள் தனுர் லக்னத்தில் புறப்பட்டு வெளியில் வந்தார். 2-ம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே 3-ம் பிரகாரத்திற்கு வந்த நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருகை தந்தார். அதிகாலை 5.45 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசல் வழியாக எழுந்தருளினார். அப்போது 'கோவிந்தா கோவிந்தா, ரங்கா.. ரங்கா.. என்று பக்தி பரவசத்துடன் பக்தர்கள் முழக்கமிட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.