தமிழக வெற்றிக்கழக தலைவரான நடிகர் விஜய் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளில் மக்களை சந்தித்தார். விஜய் பங்கேற்ற கூட்டங்களில் திரளாக மக்கள் பங்கேற்று ஆதரவு அளித்தனர்.

3-வது நிகழ்ச்சியாக கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் திறந்த வேனில் நின்றபடி அவர் மக்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 2 மாதங்களுக்கு பிறகு விஜய் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டம் பக்கத்து மாநிலமான புதுவையில் நடைபெறுகிறது.

புதுவையில் ரோடு-ஷோ சென்று மக்களை சந்திப்பதாக முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி புதுவை போலீசார் ரோடு-ஷோவுக்கு அனுமதி அளிக்கவில்லை. அதை தொடர்ந்து புதுவையில் விஜய்யின் பிரமாண்ட பொதுக் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள்.

அதை தொடர்ந்து வருகிற 8-ம் தேதி இரவு பிரசார வாகனம் புதுவைக்கு வருகிறது. துறைமுக வளாகத்தில் ஹெலிபேடு தளத்தில் வாகனம் நிறுத்தப்படுகிறது. ஒட்டுமொத்த பகுதியிலும் தொண்டர்கள் நின்றபடியே விஜய் பேச்சை கேட்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கியூ.ஆர்.கோடுடன் 10 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க உள்ளனர். 9-ம் தேதி காலை 10.30 மணி முதல் 12 மணி வரை பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சுமார் 45 நிமிடம் த.வெ.க. தலைவர் விஜய் பேச திட்டமிட்டுள்ளார். 2 மாதத்துக்கு பிறகு புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது த.வெ.க. நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.