2026-ல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீப ஒளியை ஏற்றுவார் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, மதுரைக்கு தேவையான வளர்ச்சி, அரசியல் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. ஆட்சியில் நான்கரை ஆண்டு காலத்தில் மதுரைக்கு எந்த வளர்ச்சியும் செய்யவில்லை. ரூ. 1292 கோடியில் கொண்டு வரப்பட்ட குடிநீர் திட்டப் பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் அனைத்துமே ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் மலை காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ரோப் கார் திட்டம் செயல்படுத்தப்படும் என கூறினார்கள். இது வரை அதற்கான பணிகள் எதுவுமே தொடங்கப்படவில்லை. மதுரைக்கு ஏதேனும் அரசு கல்லூரிகள் கொண்டு வரப்பட்டதா, தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டதா, மதுரை மேயர் பதவி இன்னும் காலியாக உள்ளது. மேயர் இன்னும் நியமிக்கப்படவில்லை. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மக்கள் தடையேதும் சொல்லவில்லை. ஆனால் தி.மு.க. அரசு பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கிறது. மத ஒற்றுமையை திசை திருப்பும் வகையில் தி.மு.க. செயல்பட்டு வருகிறது. சாலையோரங்களில் உள்ள கடைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது நீதிமன்ற உத்தரவை காட்டித்தான் மேற்படி பணிகளை செய்கிறார்கள். அப்படி என்றால் தற்போது திருப்பரங்குன்றம் மலைஉச்சியில் நீதிமன்ற உத்தரவை தி.மு.க. அரசு ஏன் மதிக்கவில்லை.2026-ல் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அப்போது எடப்பாடி பழனிசாமி திருப்பரங்குன்றம் மலையில் தீப ஒளியை ஏற்றுவார் என தெரிவித்தார்.